நெய்வேலி அருகே, பஸ்-வேன் மோதல் 2 பெண்கள் உடல் நசுங்கி பலி - 17 பேர் படுகாயம்

நெய்வேலி அருகே பஸ்-வேன் மோதிய விபத்தில் 2 பெண்கள் உடல் நசுங்கி பலியானார்கள். 17 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2019-04-22 22:30 GMT
நெய்வேலி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் நேற்று மதியம் காதணி விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக வடலூர் அருகே உள்ள நைனார்குப்பத்தை சேர்ந்த 19 பேர், ஒரு வேனில் புறப்பட்டனர்.

இந்த வேன், கும்பகோணம்-சென்னை சாலையில் நெய்வேலி அருகே புதிய வீராணம் திட்ட நீரேற்று நிலையம் அருகில் வந்தது. அப்போது சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னார்குடி நோக்கி வந்த அரசு பஸ்சும், வேனும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேனின் முன்பகுதியும், பஸ்சின் முன்பகுதியும் சேதமடைந்தது. வேனில் வந்த நைனார்குப்பத்தை சேர்ந்த ஆதிமூலம் மனைவி மகாராணி(வயது 45) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அருணாசலம் மனைவி தமிழ்செல்வி(50) உடல் நசுங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

மேலும் படுகாயமடைந்த 17 பேரும், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினர்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்செல்வி, ரஞ்சிதம், கமலம்(65), பார்வதி(50), குணசுந்தரி(45), கனகவல்லி(40), செல்வராணி(37), செல்வி(50) ஆகியோர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார். மற்ற 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் படுகாயமடைந்த சிவகங்கை(54), விஜயலட்சுமி(50), மங்கையர்கரசி(52), கலைச்செல்வி(50), தனலட்சுமி(70), மணிகண்டன் மகள் வைஷ்ணவி(4) உள்பட 10 பேர், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலியான மகாராணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் வேன் டிரைவரும், பஸ்சில் வந்தவர்களும் காயமின்றி உயிர்தப்பினர்.

பின்னர் விபத்திற்குள்ளான அரசு பஸ்சையும், வேனையும் போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்தினால் கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்