கடினமான காலத்தில் நம்மை கல்வி தான் காப்பாற்றுகிறது பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு

கடினமான காலக்கட்டத்தில் நம்மை கல்வி தான் காப்பாற்றுகிறது என்றும், தாய்மொழியை எப்போதும் மறக்கக்கூடாது என்றும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.

Update: 2019-04-22 22:42 GMT
பெங்களூரு,

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா பெங்களூரு சென்டிரல் கல்லூரியில் உள்ள ஞானஜோதி அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இது போட்டி நிறைந்த உலகம். தரமான கல்வி போதிக்கப்பட வேண்டும். கல்வி தான், கடினமான காலக்கட்டத்தில் நம்மை காப்பாற்றுகிறது. அதனால் ஒவ்வொருவரும் கல்வியை கற்க வேண்டும். இன்றைய இளம் சமுதாயத்தினரிடையே பொறுமை என்பது குறைந்துவிட்டது.

அதற்கேற்ப இளம் சமுதாயத்தினர் மாற வேண்டும். உயர்கல்வி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்றைய பட்டமளிப்பு விழாவில் விவசாயிகளின் குழந்தைகள் தங்க பதக்கங்களை பெறுகிறார்கள்.

வாய்ப்பு கிடைத்தால் விவசாயிகளின் குழந்தைகள் சாதனை படைக்கிறார்கள். பெண் குழந்தைகளின் கல்வியிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்தால், அவர்கள் பல சாதனைகளை படைக்கிறார்கள்.

நாட்டில் இன்று உயர்ந்த பதவிகளில் பெண்கள் இருக்கிறார்கள். நாட்டின் ராணுவ மந்திரியாக இருப்பவர் ஒரு பெண். தாய்மொழி எப்போதும் அழகாக இருக்கிறது. தாய்மொழி கண்களை போன்றது. கன்னட மொழி எப்போதும் அழகானது. தாய்மொழியில் உரையாட வேண்டும்.

யாரும் தாய்மொழியை மறக்கக்கூடாது. பிற மொழிகளை கற்க வேண்டும். ஆனால் தாய்மொழியை எப்போதும் மறக்க வேண்டாம். அதே போல் பிறந்த நாட்டையும் மறக்கக்கூடாது. வாழ்க்கையில் குருவின் பாங்கு அளப்பரியது. கூகுள் எப்போதும் குருவை மீற முடியாது.

குருவுக்கு உரிய மரியாதை வழங்குவதையும் மறக்கக்கூடாது. பெங்களூருவிசை எனக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகள். நான் மந்திரியாக இருந்தபோது, இவற்றை அடிக்கடி உண்பேன். இப்போது பாதுகாப்பு விஷயங்கள் காரணமாக, ஓட்டலுக்கு சென்று சாப்பிட முடியாத நிலை உள்ளது. இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

இந்த விழாவில் ஜெயதேவா இதயநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மஞ்சுநாத் மற்றும் சமூக சேவகர் எஸ்.வி.சுப்பிரமணியா ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் 65 ஆயிரத்து 39 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டன. இவர்களில் 328 மாணவர்கள் தங்க பதக்கம் பெற்றனர். பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் மகள் வினுதா என்ற மாணவி அதிகபட்சமாக 7 தங்க பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார். இந்த விழாவில் 166 பேருக்கு பி.எச்.டி. டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்