குடிநீர் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

கலசபாக்கம் அருகே குடிநீர் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

Update: 2019-04-24 23:00 GMT

கலசபாக்கம், 

கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம்புதூர், வடகாலனி, கெங்கவரம் காலனி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்து கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முனியப்பன் தலைமையில் அக்கட்சியினர் ஆதமங்கலம்புதூர் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, கடலாடி போலீசார் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக ஒரு திறந்தவெளி கிணறு அமைத்து தருவதாக உறுதி அளித்தனர்.

அதன்பிறகு சாலை மறியல் கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்