போக்குவரத்து விதிகளை மீறி ரெயில் தண்டவாளத்தை கடக்க முந்திக் கொண்டு வந்த தனியார் பஸ்; முன்னாள் எம்.எல்.ஏ. சிறை பிடித்ததால் பரபரப்பு

புதுவையில் தண்டவாளத்தை கடக்க முந்திக் கொண்டு வந்த தனியார் பஸ்சை முன்னாள் எம்.எல்.ஏ. சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-24 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை கடலூர்-சாலையில் வனத்துறை அலுவலகம் அருகே ரெயில்வே கேட்டை அடைத்து மீண்டும் திறக்கும்போது அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருபுறமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதுபோன்ற நேரங்களில் கடலூர் செல்லும் தனியார் பஸ்கள் போக்குவரத்து விதிகளை மீறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கட்டையை தாண்டி மற்ற வாகனங்களை பின்னுக்கு தள்ளும் வகையில் வலது புறமாக சென்று ரெயில்வே கேட் முன் நிறுத்தப்படுகின்றன.

ரெயில்வே கேட்டை திறந்ததும் எதிரே முதலியார்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் அப்படியே நின்று விடுகின்றன. இதன் காரணமாக மேலும் அதிகமாக போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பது வழக்கமாக நடந்து வருகிறது.

இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். இதனை கண்காணித்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டிய போக்குவரத்து போலீசார் அங்கு பணியில் இருப்பது இல்லை.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புதுவை வந்த பயணிகள் ரெயிலுக்காக முதலியார்பேட்டை ரெயில்வே கேட் மூடப்பட்டது. வழக்கம்போல் ரெயில்வே கேட் முன்பு இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது புதுவையில் இருந்து கடலூருக்கு சென்ற ஒரு தனியார் பஸ் மற்ற வாகனங்களை பின்னுக்கு தள்ளி வலது புறமாக சென்று நின்றது.

ரெயில்வே கேட் திறக்கப்பட்டதும் இந்த பஸ்சால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. நேரு அந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்தினார். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வாகனங்களை அனுப்பினார். பின்னர் அந்த தனியார் பஸ் டிரைவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக நூதன தண்டனை வழங்கும் வகையில் பஸ்சை சிறை பிடித்தார். சுமார் 30 நிமிடத்துக்குப் பிறகு அந்த பஸ்சை விடுவித்து அங்கிருந்து செல்ல அனுமதித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்