அறந்தாங்கியில் வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது நகைக்காக கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்

அறந்தாங்கியில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்கள் போலீசாரிடம் நகைக்காக கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

Update: 2019-04-25 23:00 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கணபதி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35). இவர் அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 23-ந் தேதி காலையில் புதுக்கோட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள காட்டு பகுதியில் முருகேசன் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மார்சல் புதுக்கோட்டையில் இருந்து வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் தொலைவில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த செல்போனை கண்டுபிடித்தது.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் துரையரசபுரம் சமத்துவபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்குமார் (23) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஞானசேகரன் மகன் சத்தியசேகரன்(37), பெருமாள் பட்டியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சுரேஷ் என்கிற பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சதீஷ்குமார், சத்தியசேகரன், பாலசுப்ரமணியன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசாரிடம், பாலசுப்ரமணியன், சத்திய சேகரன் ஆகியோர் வாக்கு மூலம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் 2 பேரும் சேர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு நகைக்காக தங்களுடன் பெயிண்டர் வேலை பார்த்த அறந்தாங்கியை சேர்ந்த செல்லய்யா மகன் ராஜேந்திரன் என்பவரை அல்லரைமேல வயல் காட்டு பகுதியில் வைத்து தலையில் சுத்தியலால் அடித்து கொலை செய்து அவரிடம் இருந்த, தங்க சங்கிலி, 2 மோதிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உடலை காட்டு பகுதியில் போட்டுவிட்டு அவருடைய மோட்டார் சைக்கிளை அறந்தாங்கி ரெயில்வே நிலையத்தில் போட்டு விட்டோம்.

அவரது உடல் அழுகியதால் யாருக்கும் அடையாளம் தெரியாமல் போனது. போலீசார் எங்களையும் கண்டு பிடிக்கவில்லை. இதனால் சுதந்திரமாக நாங்கள் ஒன்றும் தெரியாதது போல் சகஜமாக திரிந்தோம். இந்நிலையில் பஞ்சர் கடை வைத்து இருக்கும் முருகேசன், அவரது கழுத்தில் 4 பவுன் சங்கிலி அணிந்திருப்பதை பார்த்தவுடன் மீண்டும் பழைய முறையில் கொலை செய்ய திட்டமிட்டு, எங்களுக்கு உதவிக்காக சதீஸ்குமாரை சேர்த்து கொண்டோம்.

சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனது போல் முருகேசனை அழைத்து புதுக்கோட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் காட்டு பகுதிக்கு அழைத்து சென்றோம். அப்போது அவர் வருவதற்கு முன்னதாகவே காட்டு பகுதியில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளில் பஞ்சர் ஆனது போல் காற்றை திறந்து விட்டோம். அவர் கீழே குனிந்து டயரை கழற்றும் போது தலையின் பின்னால் சுத்தியலால் தாக்கினோம். அப்போது அவர் உயிரிழந்தது உறுதி செய்த பின்னர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக தலையில் பாராங் கல்லை தூக்கி போட்டோம்.

இதில் முருகேசன் முகம் சிதறியது. இதையடுத்து உடனடியாக நாங்கள் மூன்று பேரும் அவர் வைத்திருந்த செல்போனை சிறிது தூரத்தில் புதைத்து விட்டு, அவருடைய மோட்டார் சைக்கிளை அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு, அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை அறந்தாங்கியில் உள்ள நகை கடையில் விற்றுவிட்டு, சதீஸ்குமாரை சொந்த ஊரான துரையரசபுரத்தில் இருக்கச் சொல்லிவிட்டு நாங்கள் மேட்டுப்பாளையத்திற்கு சென்றோம் எனக்கூறினார். 

மேலும் செய்திகள்