பவானிசாகர் அருகே பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கும் பணி தீவிரம்

பவானிசாகர் அருகே பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-04-25 22:45 GMT
புஞ்சைபுளியம்பட்டி, 

தமிழக சட்டசபையில் 110- விதியின் கீழ் வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாச்சார கிராமம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே காராச்சிக்கொரை கிராமப்பகுதியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்க 20 ஹெக்டேர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அருங்காட்சியகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பவானிசாகர் தொகுதி எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்த பழங்குடியின அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாசார கிராமத்தில் பழங்குடியின மக்கள் வனம் மற்றும் வன உயிரினங்களுடன் ஒன்றிணைந்து வாழும் முறை, வாழ்விடங்கள், வாழ்க்கை முறைகள், கலாச்சார பராம்பரிய முறைகள், பயன்பாட்டு பொருட்கள், விவசாய முறைகள், உணவு பழக்க வழக்கங்கள், மருத்துவ வழிமுறைகள், பயன்படுத்தும் இசை கருவிகள் மற்றும் பழங்குடியின கிராம மக்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், பழங்குடியினர் கலாச்சார கிராமத்தில் சங்க இலக்கியம் ஸ்டுடியோவும் அமைக்கப்பட உள்ளது.

அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் கூறியதாவது:- பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்கள் உபயோகப்படுத்திய உடைகள், வாழ்வியல் பொருட்கள், கல் மற்றும் மர பொருட்கள் மாதிரிகள் அமைத்தல், பழங்குடியினர் குடியிருப்பு மாதிரி அமைத்தல், மூலிகை தோட்டம் அமைத்தல், பார்வையாளர்களுக்காக இயற்கை பசுமை பூங்காவும் அமைக்கப்படுகிறது.

மேலும், பார்வையாளர்கள், மாணவர்கள், ஆராய்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் தங்குவதற்கான கட்டிடங்கள் கட்டப்படுவதோடு, ஆழ்குழாய் கிணறு மற்றும் மேல்நிலைத்தொட்டி அமைத்து குடிநீர் வசதியும் செய்யப்பட்டு வருகிறது. 70 சதவீத பணிகள் நிறைவு பெற்று உள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்