புதுச்சேரியில் இருந்து காஞ்சீபுரத்திற்கு காரில் கடத்திய 912 மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது
புதுச்சேரியில் இருந்து காஞ்சீபுரத்திற்கு காரில் கடத்திய 912 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.;
விழுப்புரம்,
கோட்டக்குப்பம் மது விலக்கு அமல்பிரிவு போலீஸ் ஏட்டுகள் ராஜேந்திரன், செந்தில்குமார், ராஜசெல்வம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கோட்டக்குப்பம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் 20 அட்டைப்பெட்டிகளில் 912 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள சூரடிமங்கலம் கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் மணிக்குமார் (வயது 32) என்பதும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு மதுபாட்டில்களை கடத்தியதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மணிக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.