பெங்களூருவில் ரெயில் என்ஜின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி யார் அவர்? போலீஸ் விசாரணை

பெங்களூருவில் ரெயில் என்ஜின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.

Update: 2019-04-25 23:10 GMT
பெங்களூரு, 

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். திடீரென்று அவர் ரெயில் என்ஜின் ஒன்றின் மீது ஏறியதோடு, தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார். இதை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் என்ஜினில் இருந்து கீழே இறங்கும்படி அவரிடம் கூறினார்கள். ஆனால், அவர் கீழே இறங்கி வரவில்லை. இதற்கிடையே, சம்பவம் நடந்த இடத்தில் அதிகளவில் கூட்டம் கூடியது.

இதைப்பார்த்த வாலிபர் தனது கைகளை அசைத்து தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள உயர்மின் அழுத்த வயரில் அவருடைய கை பட்டது. இதனால், அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவருடைய உடலை கைப்பற்றிய சிட்டி ரெயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்?, எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இருப்பினும் அதுபற்றிய எந்த விவரங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்கொலை செய்வதாக ரெயில் என்ஜின் மீது ஏறி மிரட்டல் விடுத்து மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் 3 நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. இந்த சம்பவத்தை ரெயில் நிலையத்தில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததாலும், அந்த வீடியோ வெளியானதாலும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்