வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 40 பேரிடம் பணமோசடி செய்த 2 பேர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 40 பேரிடம் பணமோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-25 23:14 GMT
தானே,

தானேயை சேர்ந்தவர் விக்ரம். இவருக்கு அருண் தாக்குர்(வயது27) மற்றும் கவுரவ் ஜா(27) ஆகிய 2 பேர் அறிமுகமாகினர். அவர்கள் விக்ரமுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறினர். அதன்படி அவரை மலேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சென்ற பின்னர் தான், அவர்கள் கொடுத்தது போலி விசா என்பது தெரியவந்தது. இதனால் மலேசியாவில் பிரச்சினைகளில் சிக்கி தவித்த விக்ரம் பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இதையடுத்து தானே வந்ததும் அவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தன்னிடம் பணமோசடி செய்த இருவர் மீதும் சிட்லசர் போலீசில் புகார் கொடுத்தார்.

2 பேர் கைது

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் தாக்குர், கவுரவ் ஜா இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், விக்ரம் உள்பட சுமார் 40-க்கும் மேற்பட்டோரை வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்