இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-04-30 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா நொச்சிப்பட்டி பக்கமுள்ளது புதுக்காடு. இந்த ஊரைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர், 4.7.2008 அன்று புதுக்காடு கிராமத்தில் குட்டைகாடு பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த விவசாயி வாத்தியார் என்பவர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வாத்தியாரை கைது செய்தனர். அவர் மீது பிரிவு 417 (தவறான தகவல்களை தெரிவித்தல்), 420 (மோசடி செய்தல்), 506 (1) கொலை மிரட்டல், 376 (பாலியல் பலாத்காரம் செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வாத்தியாருக்கு பாலியல் பலாத்கார குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், தவறான தகவல்களை தெரிவித்த குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறையும், ரூ.1,000 அபராதமும், கொலை மிரட்டல் குற்றத்திற்கு ஒரு வருட சிறையும், 1,000 அபராதமும் என மொத்தம் ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வாத்தியாரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.

மேலும் செய்திகள்