ஊட்டி மலர் கண்காட்சியை 17–ந் தேதி கவர்னர் தொடங்கி வைக்கிறார்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123–வது மலர் கண்காட்சியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 17–ந் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சி 5 நாட்கள் நடைபெறுகிறது.

Update: 2019-04-30 22:45 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஊட்டியில் கோடை விழா நடத்தப்படுகிறது. அதன்படி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற 17–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை 5 நாட்கள் 123–வது மலர் கண்காட்சியும், 25 மற்றும் 26–ந் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61–வது பழக்கண்காட்சியும் நடைபெறுகிறது.

மலர் கண்காட்சியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். மலர் கண்காட்சி தொடக்க விழா மற்றும் நிறைவு விழாக்களில் அரசு துறையை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இன்கா மேரிகோல்டு, பிரஞ்ச் மேரிகோல்டு, ப்ளாகஸ், பெட்டுனியா, பேன்சி, டையான்தஸ், பெகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ், வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், லில்லியம், சன்பிளவர், சப்னேரியா உள்பட 185 ரகங்களை சேர்ந்த மலர் செடிகள் பல்வேறு பகுதிகளில் உள்ள பாத்திகளில் நடவு செய்யப்பட்டு உள்ளது. மலர் மாடத்தில் 30 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் செடிகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான பரதநாட்டியம், இசைக்குழுக்களின் நிகழ்ச்சி போன்றவை 5 நாட்களிலும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

சிறந்த பழத்தோட்டம், ரோஜா தோட்டம், காய்கறி தோட்டம், பூந்தோட்டத்திற்கான சுழற்கோப்பைகள் மற்றும் பரிசு கோப்பைகளை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கண்காட்சி நிறைவு நாளன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வழங்குகிறார். மேலும் தனியார், அரசுத்துறை அரங்குகள் மற்றும் போட்டியாளர்கள் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்