ஜோலார்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை, பணம் கொள்ளை

ஜோலார்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் நெல் மூட்டைகளை அடுக்கி சுற்றுச்சுவர் ஏறிக்குதித்து தப்பிச்சென்றுள்ளனர்.

Update: 2019-04-30 23:14 GMT

ஜோலார்பேட்டை,

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை எம்.எம்.ரெட்டி தெருவை சேர்ந்தவர் ஜோதீஸ்வரன் (வயது 45). தொழில் அதிபரான இவர் கேபிள் டி.வி.நடத்தி வருவதோடு விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜோதீஸ்வரன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றார்.

வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கடந்த ஞாயிறன்று இரவு காம்பவுண்டு சுவர் மீது ஏறி உள்ளே குதித்துள்ளனர். பின்னர் கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து உள்ளே நுழைந்த அவர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 62 பவுன் நகைகள், 15 கிலோ வெள்ளி மற்றும் ரூ.1½ லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

பின்னர் வெளியே வந்த அவர்களால் சுற்றுச்சுவர் மீது உடனடியாக ஏற முடியவில்லை. இதனையடுத்து அங்கிருந்த நெல் மூட்டைகளை அவர்கள் உயரமாக அடுக்கினர். அதன்பின் நெல் மூட்டைகள் மீது ஏறி சுவர் ஏறி குதித்து கொள்ளையடித்த நகை, பணத்துடன் தப்பிவிட்டனர். இந்த நிலையில் திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய ஜோதீஸ்வரன் உள்ளே சென்றபோது பீரோவில் இருந்த துணிமணிகள் அலங்கோலமாக கிடந்ததை பார்த்தார். பீரோவில் இருந்த நகை, பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கொள்ளைபோன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் வரை இருக்கலாம் என தெரிகிறது.

இது குறித்து திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வேலூரிலிருந்து தடயவியல் நிபுணர் பாரி சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து பார்வையிட்டு பீரோ மற்றும் கதவில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தார். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டின் பீரோ முன்பிருந்து மோப்பம்பிடிக்க விடப்பட்டது. வெளியே சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்த நாய், ரெயில்வே கூட்டுறவு ரேஷன்கடை அருகே நின்று விட்டது. எனவே அந்த இடத்திலிருந்து மர்மநபர்கள் வாகனத்தில் தப்பியிருக்கலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், சேகரிக்கப்பட்ட தடயங்களை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த 4 நாட்களுக்குள் அங்கு சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராவது நடமாடினார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்