அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு கலெக்டர் கலந்து கொண்டார்

அரவக்குறிச்சி இடைத்தேர்தலையொட்டி துணை ராணுவத்தினரின் கொடி அணி வகுப்பு நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டார்.

Update: 2019-05-01 23:00 GMT
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவத்தினர் அரவக்குறிச்சிக்கு வந்துள்ளனர். இதையடுத்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் நேற்று துணை ராணுவ படையினரின் கொடி அணி வகுப்பு நடந்தது.

இதில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் முன்னிலையில் முக்கிய வீதிகள் வழியாக துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் துப்பாக்கிகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.

கலெக்டர் பேட்டி

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவினை வாக்காளர்கள் அச்சமின்றி நேர்மையாக வாக்கு அளிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. இத்தொகுதியில் உள்ள 250 வாக்குசாவடி மையங்களில், பதற்றமான வாக்குச்சாவடிகளாக 29 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு அன்று வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க 3 கம்பெனிகளை கொண்ட மத்திய தொழில் பாதுகாப்புபடை பிரிவினர் வருகை புரிந்துள்ளனர். இவர்களுடன் 50 பேர் கொண்ட பட்டாலியன் படை பிரிவினரும், 10 உள்ளுர் காவலர்களும் என 252 பேர், ஒரு கூடுதல் காவல் காண்கணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அதனை தொடர்ந்து அரவக்குறிச்சியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 

மேலும் செய்திகள்