விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு பேச்சு வார்த்தையை தொடங்க கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகை

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தக்கோரி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2019-05-02 23:00 GMT
குமாரபாளையம்,

குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் தங்களுக்கு கூலி உயர்வு கோரி கடந்த 2 மாதங்களாகவேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சேலம் தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் விசைத்தறி தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் இடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

இதனிடையே நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்ததால் மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை தொழிற்சங்கத்தினர் தேர்தல் முடியும் வரை ஒத்திவைத்தனர். ஆனாலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது தேர்தல் முடிந்து விட்டது. விசைத்தறி கூலி உயர்வு கோரிக்கை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வலியுறுத்தி பல இடங்களில் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை தொழிற்சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.

தாலுகா அலுவலகம் முற்றுகை

இந்நிலையில், நேற்று பகல் 12 மணி அளவில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் பாலுசாமி, மோகன், வெங்கடேஷ், சரவணன், அசோகன், சண்முகம் மற்றும் 30 பெண்கள் உள்பட சுமார் 100 பேர் குமாரபாளையம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது அங்கு தாசில்தார் இல்லை. அவர் வரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறி திடீரென தாலுகா அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார், தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தாசில்தார் தங்கமும் வந்தார். இதையடுத்து போராட்டக் குழுவினர் தாசில்தாரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில், கூலி உயர்வு சம்பந்தமாக விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் தங்கம், இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்