புத்தாநத்தம் அருகே காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

புத்தாநத்தம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-05-03 22:30 GMT
மணப்பாறை, 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட மெய்யம்பட்டி கிராமத்தில் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையான காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் ஆழ்குழாய்கள் மூலம் போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை.

இதனால் கடும் அவதிக்கு ஆளான மக்கள் தினமும் தண்ணீரை தேடி அலைய வேண்டிய நிலை இருந்து வருகின்றது. தற்போது கடுமையான வறட்சியால் தண்ணீர் எங்கும் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுபற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன்காரணமாக ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் மெய்யம்பட்டி பிரிவு பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் ஊராட்சி அலுவலகத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்