சாலையில் தர்ணா போராட்டம் நடத்திய இளம்பெண்ணை காதல் கணவருடன் சேர்த்து வைத்த போலீசார்

அந்தியூரில் சாலையில் தர்ணா போராட்டம் நடத்திய இளம்பெண்ணை, அவருடைய காதல் கணவருடன் போலீசார் சேர்த்து வைத்தனர்.

Update: 2019-05-03 22:45 GMT
அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பூலப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 28). இவர் கோவையில் உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரும், அந்தியூரை அடுத்த கெட்டிசமுத்திரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஹேமலதாவும் (24) காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன்காரணமாக 2 பேரும் பிரிந்தனர். இதனால் ஹேமலதா, கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

இதனிடையே தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு கார்த்திகேயனுக்கு, செல்போன் மூலம் ஹேமலதா அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. ஆனால் அதற்கு சரியான பதிலை கார்த்திகேயன் கூறவில்லை. இந்த நிலையில் தன்னுடைய காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி அந்தியூர்- பர்கூர் ரோட்டின் நடுவே சாலையில் உட்கார்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஹேமலதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கார்த்திகேயனுடன் சேர்த்து வைக்க சமாதான பேச்சு நடத்தப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் தன்னுடைய தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

இதைத்தொடர்ந்து கார்த்திகேயன் மற்றும் ஹேமலதாவை போலீசார் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஹேமலதாவுடன் சேர்ந்து வாழ கார்த்திகேயன் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் பூலப்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு மனைவி ஹேமலதாவை கார்த்திகேயன் அழைத்து சென்றார்.

மேலும் செய்திகள்