திருப்பூரில் சேதமடைந்து காணப்படும் அரசு கல்லூரி மாணவர் விடுதி சீரமைக்க கோரிக்கை

திருப்பூரில் அரசு கல்லூரி மாணவர்கள் விடுதியின் கட்டிடம் சேதமடைந்து அபாயகரமாக காட்சியளிக்கிறது. எனவே சேதமடைந்த மாணவர் விடுதியை சீரமைக்க வேண்டும் என்று மாணவ ர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-05-03 22:10 GMT

திருப்பூர்,

திருப்பூர் காலேஜ் ரோடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் பின்புறம் அரசு கல்லூரியில் படிக்கும் வெளிமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கான விடுதி உள்ளது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் முதுநிலை படிப்பு படிக்கும் வெளிமாவட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். 26 அறைகள் கொண்ட இந்த விடுதியில் 150–க்கும் மேற்பட்டவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

ஆனால் இந்த விடுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்று மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். விடுதி கட்டிடத்தின் கான்கிரீட் மேல்தளம் மிகவும் சேதமடைந்துள்ளது. ஜன்னல் சிலாப்புகள் உடைந்து அபாயகரமாக காணப்படுகிறது. மழைக்காலத்தில் மழைநீர் சுவர் வழியாக கசிந்து அறைக்குள் வருவதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் புலம்புகின்றனர்.

அதுபோல் மாணவர்களுக்கான கழிவறைகளில் தண்ணீர் வருவதில்லை என்று கூறப்படுகிறது. தண்ணீர் குழாய்கள் சேதமடைந்து இருப்பதால் வாளியில் தண்ணீரை கொண்டு சென்று தான் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். தண்ணீர் தொட்டியை சரிவர சுத்தம் செய்யாமல் பாசி படர்ந்து காணப்படுகிறது. விடுதி போதுமான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும், சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரமைப்பு பணிகள் நடந்துள்ளன. ஆனால் விடுதியின் முன்புறம் மட்டும் சீரமைப்பு பணிகள் நடந்து வர்ணம் பூசப்பட்டுள்ளது. விடுதியின் பின்புறம், உள்புறத்தில் கான்கிரீட் மேற்தளம் உடைந்துள்ளதை இதுவரை சரி செய்யப்படாமல் இருக்கிறது. பெயரளவுக்கு சீரமைப்பு பணி நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

மேலும் மாணவர்கள் கூறும்போது, முதலாமாண்டு, 3–ம் ஆண்டு மாணவர்களுக்கு வருகிற 9–ந் தேதி தேர்வு தொடங்க உள்ளது. மாணவர்கள் விடுதியில் தங்க கூடாது. வீட்டுக்கு செல்லுமாறு விடுதி காப்பாளர் கூறுகிறார். ஆனால் நாங்கள் ஊருக்கு சென்று திரும்புவது சிரமமாக இருப்பதால் 50–க்கும் மேற்பட்டவர்கள் விடுதியில் உள்ளோம். நாங்கள் இங்கு எங்களுடைய சொந்த முயற்சியில் தான் தங்கி உள்ளோம். விடுதியில் போதுமான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், சேதமடைந்து காணப்படும் கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் சீரமைக்க முன்வர வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்