க.பரமத்தி ஒன்றியத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் டி.டி.வி.தினகரன் பேச்சு

க.பரமத்தி ஒன்றிய பகுதியில் நடந்த பிரசாரத்தின்போது, மாணவர்களின் நலன் கருதி அப்பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2019-05-04 23:00 GMT
க.பரமத்தி,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி, அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல் ஹமீதுக்கு ஆதரவு கேட்டு, க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்பிவாடி, ஆரியூர், எல்லமேடு, சின்னதாராபுரம், க.பரமத்தி, பவுத்திரம், சத்திரம் உள்ளிட்ட இடங்களில் திறந்தவேனில் நின்றவாறு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவின் ஆதரவோடு ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கினோம். ஆனால் அவர் பா.ஜ.க.வின் ஏஜெண்டாக செயல்பட்டதால், பின்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கினோம். அப்போது கூட நம்மோடு இருந்தவர் வி.செந்தில்பாலாஜி. பதவிவெறியின் காரணமாக தான் தற்போது அவர் தி.மு.க.வுக்கு சென்றிருக்கிறார்.

அதுபோல ஜெயலலிதாவின் பெயரை சொல்லி தற்போது ஆட்சி நடத்தி கொண்டிருப்பவர்கள், அவர் முன்பு எந்த திட்டங்களையெல்லாம் வேண்டாம் என்று எதிர்த்தாரோ? அதையெல்லாம் தற்போது செயல்படுத்துகின்றனர். இதனால் தமிழக உரிமை பறிபோவதோடு மோடியின் எடுபிடிகளாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இருப்பது தெரிகிறது. அவர்களது ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வந்து, ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மலர செய்ய பரிசு பெட்டி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். நாங்கள் வெற்றி பெற்றால் தமிழக விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், வேலைவாய்ப்புக்காக காத்திருக்கக்கூடிய இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கு நல்ல திட்டங்களை தீட்டி செயல்படுத்துவோம்.

க.பரமத்தி ஒன்றிய பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் போதிய வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. போதிய மருத்துவர்களும், உயிர்காக்கும் மருந்துகளும் சரிவர இல்லை. நாங்கள் வெற்றி பெற்றால் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை வழங்கப்படும். அனைத்து தரப்பு மக்களுக்கும் குடிநீர் கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீரை தேக்கி வைக்க தடுப்பணை, கசிவுநீர் குட்டைகள் அமைத்து விவசாயத்தை மேம்பாடு அடைய செய்வோம். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்