மூங்கில்துறைப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; தம்பதி படுகாயம் விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மூங்கில்துறைப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் தம்பதி படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-07 22:45 GMT

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடமாமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 47). விவசாயி. இவர் நேற்று மதியம் தனது மனைவி வசந்தியுடன் (40) ஒரு மோட்டார் சைக்கிளில் மூங்கில்துறைப்பட்டுக்கு புறப்பட்டார். பொரசப்பட்டு அடுத்த வேடியப்பன் கோவில் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கோவிந்தனின் வலதுகால் முறிந்தது. வசந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதைபார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்சுக்கும், மூங்கில்துறைப்பட்டு போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகியும் போலீசார் சம்பவ இடத்துக்கு வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொரசப்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சம்பவ இடத்துக்கு வந்த கோவிந்தனின் உறவினர்கள் விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக வராத போலீசாரை கண்டித்தும், விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரை உடனடியாக கைது செய்யக்கோரி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பியபடி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ததோடு, விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மூங்கில்துறைப்பட்டு–திருக்கோவிலூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்