வாலிபர் கொலை வழக்கின் விசாரணைக்கு ஆஜராக கோர்ட்டுக்கு வந்த ரவுடிகளை சந்தித்த 4 பேர் கைது

வாலிபரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோர்ட்டுக்கு வந்த ரவுடிகளை சந்தித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-07 20:41 GMT

வானூர்,

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான பூத்துறை காசிபாளையத்தை சேர்ந்தவர் உதயக்குமார், தி.மு.க. பிரமுகர். சம்பவத்தன்று இவர் புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பூத்துறை செல்லும் பாதையில் சென்றபோது ஒரு கும்பல் இவரை வழிமறித்தது.

தன்னை வழிமறித்தவர்கள் வழிப்பறி கும்பலாக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த உதயக்குமார், அந்த கும்பலை பிடிப்பதற்காக செல்போனில் பேசி அவருடைய உறவினர்களை வரவழைத்தார்.

அப்போது அந்த கும்பல் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் உதயக்குமாரின் உறவினர் அருண்குமார் (வயது 27) பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாகச் செத்தார்.

இந்த கொலை குறித்து வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் வாலிபர் அருண்குமாரை கொலை செய்த சம்பவத்தில் ரவுடிகள் சண்முகாபுரத்தைச் சேர்ந்த புளியங்கொட்டை என்ற ரங்கநாதன், அவருடைய உறவினர் தனசேகரன், பொறையூர்பேட் பகுதியைச் சேர்ந்த முகேஷ், ரெட்டியார்பாளையம் ஷாஜகான் உள்பட 7 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து அவர்கள் 7 பேர் மீதும் வானூர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். அங்கு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு, வானூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஆஜராக புளியங்கொட்டை என்ற ரங்கநாதன், தனசேகரன், ஷாஜகான் ஆகிய 3 பேரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அப்போது கோர்ட்டு வளாகத்தில் இவர்கள் 3 பேரையும் 4 பேர் கொண்ட கும்பல் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்.

அதனால் சந்தேகம் அடைந்த வானூர் போலீசார் விரைந்து வந்து ரவுடிகளை சந்தித்து பேசிக்கொண்டிருந்த 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் அவர்கள் புதுச்சேரி மாநிலம் முத்தரையர்பாளையத்தை சேர்ந்த தினேஷ் (19), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஷாருக்கான் (18), மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த குணசேகரன் (19), விக்னேஷ் என்ற விக்கி (19) என்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் ரவுடிகளை சந்தித்து பேசியபோது ஏதாவது சதிதிட்டம் தீட்டினார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்