விருத்தாசலம் பகுதியில், சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு வாழை மரங்கள் முறிந்து சேதம்

விருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

Update: 2019-05-08 22:45 GMT
விருத்தாசலம், 

கடலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் வறண்ட வானிலையே நீடித்து வந்ததது. பானி புயலால் மழைக்கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் ஏமாற்றி சென்றுவிட்டதுடன், வெப்பத்தை மேலும் அதிகரிக்க செய்துவிட்டது. இதனால் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் வெயில் அளவு சதத்தை கடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, விருத்தாசலம், பண்ருட்டி, காட்டுமன்னார் கோவில் என்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திடீரென மழை பெய்தது.

இதில் விருத்தாசலம் பகுதியில் இரவு 8 மணிக்கு வானில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழையாக பெய்தது. தொடர்ந்து 2 மணிநேரம் நீடித்த இந்த மழை, அவ்வப்போது பலத்த மழையாக கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழையின் போது வீசிய சூறைக்காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சின்னவடவாடி பகுதியில் விவசாயி ஒருவர் பயிர் செய்திருந்த சுமார் ஒரு ஏக்கர் வாழைமரங்கள் முறிந்து விழுந்தன. இதேபோல் இந்த பகுதியில் குறுகிய அளவில் விவசாயிகள் பயிர் செய்திருந்த வாழை மரங்களும் முறிந்து விழுந்தன. இதனால் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்