நாமக்கல், பரமத்தி வேலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு டிரைவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

நாமக்கல், பரமத்தி வேலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. வாகன டிரைவர்களுக்கான கண் பரிசோதனையும் செய்யப்பட்டது.

Update: 2019-05-09 22:30 GMT
நாமக்கல், 

நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 150-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை நேற்று முன்தினம் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் 8 வாகனங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே நேற்று நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் 2-வது நாளாக பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில் நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 171 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 3 வாகனங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

இந்த ஆய்வில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி, ராஜ்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து பள்ளி வாகனங்களின் டிரைவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 171 டிரைவர்கள் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்த கண் பரிசோதனை முகாமை நேரில் சென்று பார்வையிட்ட நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், கண் குறைபாடுள்ள டிரைவர்களுக்கென மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் வாகனங்களில் ஏற்படும் தீ விபத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர்.

பரமத்தி வேலூர் வட்டார போக்குவரத்து பகுதிநேர ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி பரமத்தியில் உள்ள மலர் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக 128 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டுவரப்பட்டு இருந்தது. திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் தலைமையில் நாமக்கல் வட்டார போக்குவரத்து அலு வலர் (தெற்கு) இளமுருகன், ஆய்வாளர் சரவணன் மற்றும் பரமத்தி வேலூர் வட்டார பகுதிநேர ஆய்வாளர் நித்யா ஆகியோர் முன்னிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

ஆய்வில் பஸ்சின் அவசரகால வழி, மேற்கூரை, படிக்கட்டுகள், உள்தளம், டயர்கள், இருக்கைகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, வாகன சான்று, விபத்துக்காப்பீடு உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். இதில் 16 பள்ளி வாகனங்களுக்கு தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது. முன்னதாக பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி வாகன டிரைவர்களுக்கு கண் பரிசோதணை முகாம் நடைபெற்றது. இந்த ஆய்வின்போது பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி (பொறுப்பு) உடனிருந்தார்.

மேலும் செய்திகள்