ஆசனூர் அருகே ரோட்டில் கூட்டமாக உலா வரும் யானைகள் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

ஆசனூர் அருகே ரோட்டில் கூட்டமாக யானைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-05-11 22:15 GMT

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர், தலமலை, தாளவாடி, ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான மான், யானை, புலி, காட்டெருமைகள் வசித்து வருகின்றன. தற்போது கத்திரி வெயில் கொளுத்தி வருவதால் வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் காய்ந்து கருகி காணப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் வறண்டு காணப்படுகின்றன.

கடந்த வாரம் வனப்பகுதியில் கோடை மழை பெய்தது. இனால் காய்ந்து கிடந்த மரம், செடி, கொடிகள் துளிர்விட தொடங்கி உள்ளது. ஆனால் குட்டைகள் நிரம்பவில்லை. இதனால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. அங்குள்ள பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தி வருகின்றன.

மேலும் யானைகள் கூட்டமாக ஆசனூர் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்கிறது. ரோட்டோரமாக நின்று கொண்டு அங்குள்ள மூங்கில் மரத்தை உடைத்து தின்று வருகிறது. ஒரு சில நேரங்களில் ரோட்டில் அங்கும் இங்குமாக உலா வருகிறது. இதனால் அந்த வழியாக பஸ், கார், லாரி, வேன், இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

யானைகள் வனப்பகுதிக்குள் சென்றபிறகே அந்த இடத்தை விட்டு வாகனங்கள் நகர முடிகிறது. எனவே ஆசனூர் அருகே உள்ள மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்