கோவை அரசு ஆஸ்பத்திரியில், மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பரிதாபமாக இறந்தது.

Update: 2019-05-11 22:30 GMT
கிணத்துக்கடவு,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திம்மங்குத்து காளியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் சேகர் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மாலதி. இவர்களுடைய மகள் மதுஸ்ரீ (6). மாலதியின் பெற்றோர் ஊர் கிணத்துக்கடவு அருகே தட்டக்கல்புதூர் ஆகும்.

அங்கு கோவில் திருவிழாவுக்காக கடந்த 5-ந் தேதி மாலதி தனது குழந்தை மதுஸ்ரீயை அழைத்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிறுமி மதுஸ்ரீக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.

இதற்காக மாலதி மற்றும் குடும்பத்தினர் மதுஸ்ரீயை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லாததால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமியை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இரவு சிறுமி பரிதாபமாக இறந்தாள். பின்னர் சிறுமியின் உடலைபார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

பலியான சிறுமி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு, மர்ம காய்ச்சல் வேகமாக பரவி பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்கியது. இந்த காய்ச்சல் காரணமாக 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். பின்னர் சுகாதாரத்துறையின் தீவிர நடவடிக்கையால் காய்ச்சல்களின் பாதிப்பு படிப்படியாக குறைந்தது.

இந்தநிலையில் தற்போது மர்ம காய்ச்சலின் பாதிப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. எனவே மீண்டும் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்