பரமக்குடி தாலுகாவில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதி நோன்பு தொழுகை நடத்துவதில் சிரமம்

பரமக்குடி தாலுகாவில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நோன்பு தொழுகை நடத்துவதில் சிரமம் உள்ளதாக ஐக்கிய ஜமாத் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2019-05-11 22:30 GMT

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தினமும் இரவு பகல் பாராமல் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பரமக்குடியில் சுமார் 6 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகள், நெசவாளர்கள், மோட்டார் நிறுவனங்கள், தொழில் கூடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. கடும் கோடை வெயிலின் தாக்கத்தாலும் அக்னி நட்சத்திர வெயிலின் கொடுமையாலும் மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில் இந்த மின்தடையால் மேலும் அவதிக்குள்ளாக்குகிறது. சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு மீண்டும் மின்சாரம் வந்தாலும் குறைந்த மின் அழுத்தமாக உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தாலும் அதே நிலை நீடிக்கிறது.

இதுகுறித்து பரமக்குடி வட்டார ஐக்கிய ஜமாத் செயலாளர் சாதிக் அலி கூறும்போது, தற்போது முஸ்லிம்கள் நோன்பு காலத்தை கடைபிடித்து இரவில் சிறப்பு தொழுகைநடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் மின் தடை ஏற்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது. இது தொழுகை நடத்துவதற்கு மிகவும் இடையூறாக உள்ளது. பெண்கள் தனியாக செல்லவும், அதிகாலையில் நோன்பு வைக்கவும் சிரமப்படுகின்றனர். எனவே இதற்கு உடனடியாக மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல நயினார்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக முன்னறிவிப்பின்றி இரவு பகல் பாராது அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.சுமார் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை மின்தடை நீடிக்கிறது. இரவு நேரங்களில் ஏற்படும் தொடர் மின்தடையால் கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரும் கொசுக்கடியிலும், புழுக்கம் காரணமாகவும் தூக்கமில்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுதவிர பேக்கரிகள், ஓட்டல்கள், மளிகை கடைகள், இரவு நேர பரோட்டா கடைகள், பால் கடைகள் என அனைத்து வியாபார நிறுவனங்களும் மின்தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தொடர் மின்தடை ஏற்பட காரணம் தெரியாமல் பொதுமக்கள் புலம்பி தவித்து வருகின்றனர். மின்சாரம் தடைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீரான மின் வினியோகம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போகலூர் பகுதிகளில் இரவு நேரங்களில் தினமும் மின்வெட்டு செய்யப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் கொசுக்கள் அதிகஅளவில் உள்ளதால் மின்சாரம் இல்லாதபோது கொசுக்கடியால் அனைத்து தரப்பினரும் தூங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்