மணப்பாறை அருகே உயர் மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

மணப்பாறை அருகே, உயர் மின் கோபுரத்தில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-05-13 23:00 GMT
மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தணிமாணிக்கம்பட்டி கிராமத்தில் உள்ள உயர் மின்கோபுரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார், தனியார் ஆம்புலன்ஸ் மீட்புக்குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயர் மின்கோபுரத்தில் ஏறி தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபரின் உடலை கயிறு கட்டி மீட்டனர்.

அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் தணிமாணிக்கம்பட்டியை சேர்ந்த காமராஜ் (வயது 23) என்பதும், திருச்சி அருகே ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்ததும், கடந்த 2 மாதத்துக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

ஜல்லிக்கட்டு ஆர்வலர்

இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வந்து காமராஜின் உடலைப்பார்த்து கதறி அழுதனர். பின்னர், போலீசார் காமராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த காமராஜ் ஜல்லிக்கட்டு மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதும், ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்ததும் தெரியவந்தது. 

மேலும் செய்திகள்