மைசூருவில், செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த பெங்களூரு பெண் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன?- போலீஸ் விசாரணை

மைசூருவில் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த பெங்களூரு பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2019-05-13 23:18 GMT
மைசூரு,

பெங்களூருவை சேர்ந்தவர் கீதா (வயது 24). இவர் மைசூரு டவுன் குவெம்பு நகரில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் கீதா, செல்போன் கடையில் தொடர்ந்து வேலை செய்து வந்தார்.

இதனால் அவர் மைசூரு சரஸ்வதிபுரம் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்து வந்தார். இந்த நிலையில் கீதா நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் அவர் விடுதி அறைக்கு திரும்பி வந்தார். ஆனால் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை.

இதன் காரணமாக சந்தேகமடைந்த அவரது தோழிகள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது கீதா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுபற்றி அதிர்ச்சி அடைந்த அவர்கள், சரஸ்வதிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் பற்றி தெரியவில்லை.

இதைதொடர்ந்து தற்கொலை செய்த கீதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

காதல் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்