நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்

நாகை நீலாயதாட்சி யம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.

Update: 2019-05-15 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகையில் காயாரோகணசாமி, நீலாயதாட்சியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சண்டிகேசுவரர் புற்றுமண் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9-ந்தேதி வசந்த உற்சவம் நடைபெற்றது. 13-ந்தேதி பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ஓலை சப்பரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக தியாகராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, நீதிபதி சீனிவாசன், செயல் அலுவலர்கள் கவியரசு, பூமிநாதன், பரமானந்தம், தக்கார் மாரியப்பன் ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். பின்னர் தேர் நீலா கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடைந்தது. வருகிற 18-ந்தேதி பக்த காட்சியும், 19-ந்தேதி பாத தரிசனம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்