குமிழியம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் செண்டை மேளம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்தனர்

குமிழியம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. அப்போது செண்டை மேளம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்.

Update: 2019-05-15 22:30 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமிழியம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த 2004-ம் ஆண்டு இரு தரப்பினர் இடையே தேர் வலம் வருவதில் பிரச்சினை ஏற்பட்டதால், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதனால் திருவிழா நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு மாரியம்மன் தேர் திருவிழாவை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இளைஞர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்த முடிவு செய்தனர்.

விநாயகர்-மாரியம்மன்

அதன்படி, கடந்த 7-ந் தேதி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து விழா நாட்களில் தினமும் இரவு சாமி வீதியுலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. கோவில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் மாரியம்மனும் எழுந்தருள செய்யப்பட்டது.

இதையடுத்து செண்டை மேளம் முழங்க தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகளின் வழியாக இழுத்து சென்றனர். அப்போது பக்தர்கள் நேர்த்தி கடனாக ஆடு பலி கொடுத்தனர். பெண்கள் மாவிளக்கு மற்றும் தேங்காய் பழம் வைத்தும், தங்கள் நிலத்தில் விளையக்கூடிய பொருட்களை தேரில் கட்டி பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். இதில் குமிழியம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்