நாமக்கல்லுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் கொண்டு வரப்பட்டன ஓரிரு நாட்களில் பள்ளிகளுக்கு அனுப்ப முடிவு

நாமக்கல்லுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இவற்றை ஓரிரு நாட்களில் பள்ளிகளுக்கு அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

Update: 2019-05-16 22:45 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், நகரவை பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் உள்பட மொத்தம் 205 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுயநிதி பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவ, மாணவிகளை தவிர அனைவருக்கும் ஆண்டுதோறும் பாடபுத்தகங்கள் அரசு சார்பில் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் நாளான ஜூன் மாதம் 3-ந் தேதியே பாடபுத்தகங்கள் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் 6-ம் வகுப்புக்கு 15,928 பாட புத்தகங்கள், 7-ம் வகுப்புக்கு 14,620, 8-ம் வகுப்புக்கு 14,887, 9-ம் வகுப்புக்கு 14,919, 10-ம் வகுப்புக்கு 15,100, பிளஸ்-1 வகுப்புக்கு 10,700 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு 11,400 பாட புத்தகங்கள் தேவை என பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இந்த பாடபுத்தங்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 50 சதவீத பாடபுத்தகங்கள் வந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவற்றை நாமக்கல்லில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைத்து உள்ளனர். இந்த பாடபுத்தகங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், திட்டமிட்டப்படி வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்