சேலம் அருகே ரெயில்களில் பெண்களிடம் நகைபறிப்பு: வடமாநில கொள்ளையர்கள் 6 பேரிடம் அதிரடி விசாரணை

சேலம் அருகே ரெயில்களில் பெண்களிடம் நகை பறிப்பு வழக்கு தொடர்பாக வடமாநில கொள்ளையர்கள் 6 பேரை பிடித்து ரெயில்வே போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-16 22:30 GMT
சூரமங்கலம், 

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவேலிப்பாளையம் பகுதியில் ரெயில்வே தரைப்பாலம் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 20 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இதை பயன்படுத்தி கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆலப்புழா, சேரன், மயிலாடுதுறை, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் 10 பெண்களிடம் 30 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சேலம், ஈரோடு, கோவை ரெயில்வே போலீசார் ஒன்றிணைந்து தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும், தமிழக ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரடி விசாரணை நடத்தி, நகை பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க ரெயில்வே போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். இதையடுத்து தனிப்படை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த நகை பறிப்பில் ஈடுபட்டது வடமாநில கும்பல் என்பது தெரியவந்தது.

இதன்பேரில் தனிப்படையினர் உத்தரபிரதேச மாநிலம் சாம்லி மாவட்டத்திற்கும், மற்றொரு தனிப்படையினர் ஆந்திரா, கர்நாடகாவிற்கும் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் மங்களூரு ரெயில் நிலையம் பகுதியில் சந்தேகப்படும்படி வடமாநிலத்தை சேர்ந்த 6 பேர் சுற்றித்திரிந்தனர். அவர்களை மங்களூரு ரெயில்வே போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். அவர்கள் 6 பேரும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்கள் 6 பேரையும் தமிழக ரெயில்வே போலீசாரிடம், கர்நாடக ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை ஈரோடு ரெயில்வே போலீசார் ரகசிய இடத்தில் வைத்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் கூட்டாளிகள் யார்? அவர்கள் எங்காவது பதுங்கியிருக் கிறார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ரெயில்களில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்த 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது, என்றனர்.

மேலும் செய்திகள்