பண்ருட்டி பகுதியில், கெடிலம், தென்பெண்ணை ஆறுகளில் மணல் கடத்தலை தடுக்க அதிரடி நடவடிக்கை

பண்ருட்டி பகுதியில் கெடிலம், தென் பெண்ணை ஆறுகளில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் வாகனங்கள் செல்லும் பாதை பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி துண்டிக்கப்பட்டது. போலீசார் மேற்காண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-05-16 23:00 GMT
புதுப்பேட்டை,

பண்ருட்டி பகுதியில் கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகள் உள்ளது. இந்த ஆறுகளில் இருந்து தினமும் மாட்டு வண்டிகள், டிராக்டர், லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுகிறது. இவ்வாறு மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், மாட்டு வண்டிகள் அந்தந்த போலீஸ் நிலையங்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் மணல் கொள்ளை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

இதற்காக கிராமங்களில் ஆறுகளுக்கு செல்வதற்கென்று தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை வழியாகத்தான் வாகனங்களில் சென்று மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. மணல் கொள்ளையை தடுக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதாவது கிராமங்களில் மணல் கொள்ளையடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதையை துண்டிக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார். அதன்படி இந்த பணியில் பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டை போலீசார் நேற்று ஈடுபட்டனர்.

பெரிய கள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றுக்கு எந்த வாகனமும் செல்ல முடியாத வகையில் பாதையின் குறுக்கே பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டன.

இதேபோல் சிறுவத்தூர், கொக்குப்பாளையத்தில் உள்ள கெடிலம் ஆற்றுக்கு செல்லும் பாதைகளிலும் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டன. பாதை துண்டிக்கப்பட்டதால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் மீறி மணல் கொள்ளையில் ஈடுபட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, மணல் கடத்தலில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்