குடிநீர் வழங்கக்கோரி, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து பாதிப்பு

கள்ளக்குறிச்சியில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-05-16 22:30 GMT
கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி நகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட மந்தைவெளி, உலகப்பசெட்டி கொல்லைத்தெரு, போயர் தெரு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுக்குழாய்கள் மூலம் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது கள்ளக்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 

இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தினந்தோறும் தங்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை வைத்தனர். இருப்பினும் குடிநீர் வழங்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9 மணியளவில் காலி குடங்களுடன் அரசு மருத்துவமனை அருகே கச்சிராயப்பாளையம் சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களது பகுதிக்கு தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி கண்டன கோஷம் எழுப்பியபடி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்