பெரியபாளையம் அருகே குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்

பெரியபாளையம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-17 22:45 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மெய்யூர் ஊராட்சியை சேர்ந்த மேட்டுகாலனி, புதிய காலனி, முஸ்லிம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை பெரியபாளையம், திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மேட்டு காலனி பகுதியில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். குடிநீர் பிரச்சினைக்கு இன்னும் 2 நாட்களில் நிரந்தர தீர்வு காணப் படும் என்று உறுதி அளித்தார்.

இதனால் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த பிரச்சினையால் நேற்று காலை 7½ மணி முதல் 8½ மணி வரை அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்தணி

திருத்தணி அருகே உள்ள கோதண்டராமாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வது இல்லை என்று கூறி அந்த பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த திருத்தணி தாசில்தார் செங்கலா மற்றும் கனகம்மாசத்திரம் போலீசார் திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்