திருபுவனை போலீசார் ரோந்து பணி: மோட்டார் சைக்கிள் திருடர்களை மடக்கி பிடித்தனர்; நகை பறிமுதல்

போலீசார் ரோந்து பணியின் போது மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-05-17 22:56 GMT

திருபுவனை,

திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்–இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் திருபுவனை, திருவண்டார் கோவில்,மதகடிப்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.ரவுண்டானா அருகே அவர்கள் வந்த போது புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி நம்பர் பிளேட் இல்லாமல் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

இதில் அவர்கள் புதுவை திப்புராயப்பேட்டையை சேர்ந்த சூர்யா(வயது20) சென்னை பெருங்குடியை சேர்ந்த விவேக்(21) என்பதும், இவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வில்லியனூர் பகுதியில் திருடி நம்பர் பிளேட்டை கழற்றி விட்டு ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கடந்த 2017ம் ஆண்டு இவர்கள் இருவரும் கலிதீர்த்தாள் குப்பத்தில் பெட்டிக்கடை நடத்தி வரும் சரஸ்வதி(40) என்ற பெண்ணிடம் குளிர்பானம் வாங்குவது போல் நடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.மேலும் 2 இடங்களில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.பறித்து சென்ற நகை மற்றும் மோட்டார் சைக்கிள்களை ஜெயிலில் இருந்த போது நண்பரான மரக்காணத்தை சேர்ந்த மோகன் தாஸ் என்பவர் மூலம் அடகு வைத்து பணம் பெற்று செலவு செய்ததாகவும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மோகன் தாசையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்