பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..? அரசு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2024-04-30 22:09 GMT

கோப்புப்படம்

சென்னை,

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு மார்ச் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26-ந்தேதி முதல் கடந்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடந்து முடிந்தது.பிளஸ்-2 தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 தேர்வை சுமார் 8 லட்சம் பேரும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்களும் எழுதி இருந்தனர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வந்தது.

பிளஸ்-2 விடைத் தாள்கள் திருத்தும் பணி கடந்த மாதம் 13-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் திருத்தும் பணி 22-ந்தேதியும் நிறைவடைந்தன.

இதுதவிர பிளஸ்-1 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி அரியர் மாணவர்களுக்கு கடந்த மாதம் 13-ந்தேதியுடனும், மற்ற மாணவர்களுக்கு 25-ந்தேதியுடனும் முடிவடைந்தது. இதையடுத்து மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் ஓரளவுக்கு முடிவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த அட்டவணைப்படியே வெளியாக இருப்பதாக அரசு தேர்வுத் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

அதன்படி பிளஸ்-2 வகுப்புக்கு வருகிற 6-ந்தேதியும் (திங்கட்கிழமை), எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு 10-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை), பிளஸ்-1 வகுப்புக்கு 14-ந்தேதியும் (செவ்வாய்க்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

வழக்கம்போல் தேர்வு முடிவுகளை வீட்டில் இருந்தபடியே மாணவ-மாணவிகள் செல்போன் மற்றும் இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்