விஜயாப்புரா அருகே, சாலையோர பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்தது 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி

விஜயாப்புரா அருகே சாலையோர பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் உடல்நசுங்கி பலியானார்கள். தங்களுடைய உறவினர் ஒருவர் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது.

Update: 2019-05-18 23:00 GMT
பெங்களூரு,

பாகல்கோட்டை மாவட்டம் ஹலதூரா கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் விஜயாப்புரா மாவட்டத்தில் இறந்த தங்களுடைய உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டனர்.

அதன்பேரில், விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகாலா தாலுகா கந்தனூரு கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்ற அவர்கள், அங்கு இறுதிச்சடங்கில் கலந்து கொண்டுவிட்டு ஒரு சரக்கு வேனில் பாகல்கோட்டைக்கு புறப்பட்டனர்.

அவர்கள் முத்தேபிகாலா தாலுகா கந்தனூரு கிராமம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக முத்தேபிகாலா தாலுகாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து முத்தேபிகாலா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் விபத்தில் சிக்கி பலியான 2 பெண்கள் உள்பட 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முத்தே பிகாலா தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவ குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் சிக்கி பலியானவர்களின் பெயர் மற்றும் காயமடைந்தவர்களின் பெயர்கள் போலீசாருக்கு உடனடியாக கிடைக்கவில்லை. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

மேலும் செய்திகள்