அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை

அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Update: 2019-05-18 23:00 GMT
கரூர்,

கரூர் அருகேயுள்ள பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 41). இவர், பல்வேறு நிதி நிறுவனங்களுக்கு நிதி ஆலோசகராக உள்ளார். இவரது அலுவலகம் கரூர் வையாபுரி நகர் 3-வது குறுக்குத் தெருவில் உள்ளது. இவர் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பறக்கும் படை அதிகாரி மனோகரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் மோகன்ராஜின் அலுவலகத்திற்கு திடீரென வந்தனர். அவர்கள் மோகன்ராஜிடம், உங்களது அலுவலகத்தில் தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா நடப்பதாக ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரித்து விட்டு சோதனையிட வந்துள்ளோம் என தெரிவித்தனர். அவர்களிடம், கட்சி பணிகள் பற்றி தான் ஆலோசனை நடத்தி வருகிறோம். யாரோ வீண் பழி சுமத்தி திசைதிருப்பும் வகையில் புகார் கூறியிருக்கின்றனர் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அவரது அலுவலகத்தில், உரிய ஆவணங்களின்றி பணம் ஏதும் உள்ளதா? பட்டுவாடா செய்வதற்கான விவரங்கள் ஏதும் இருக்கின்றனவா? என பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இதில் எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அங்கிருந்த சில பிரசார நோட்டீசுகளை மட்டும் அந்த குழுவினர் எடுத்து விட்டு வெளியே வந்தனர். இந்த சோதனையானது தேர்தல் வீடியோ குழு மூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சோதனை நடத்திய விவரம் குறித்து, தேர்தல் பிரிவு உயரதிகாரிக்கு பறக்கும் படையினர் தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்