முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் மலர் தூவி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் நாம் தமிழர் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2019-05-18 23:00 GMT
ராமேசுவரம்,

இலங்கையில் ராணுவத்துக்கும்-விடுதலை புலிகளுக்கும் நடந்த போரில் இலங்கை ராணுவம் முள்ளிவாய்க்காலில் நடத்திய தாக்குதலில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இறந்துபோனார்கள்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தையொட்டி, போரில் உயிரிழந்த தமிழர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும், இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டியும் நேற்று ராமேசுவரத்தில் நாம் தமிழர் கட்சியினர் கையில் கட்சி கொடியுடன் ஊர்வலமாக அக்னி தீர்த்த கடற் கரைக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் அக்னி தீர்த்த கடலில் இறங்கி நின்று முள்ளிவாய்க்காலில் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக மலர் தூவி அஞ்சலி செலுத்தி வீரவணக்கம், வீர வணக்கம் என முழக்கமிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கண். இளங்கோ, மாவட்ட தலைவர் நாவற்கனி, மாணவர் பாசறை செயலாளர் ராஜி, நகர் தலைவர் காளிவேல், நகர்செயலாளர் குட்டிமணி, நிர்வாகிகள் பிரேம், லட்சுமணன், எட்வின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோல் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையில் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்