கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். திற்பரப்பு அருவியில் கூட்டம் அலைமோதியது.

Update: 2019-05-19 22:45 GMT
கன்னியாகுமரி,

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சர்வ தேச சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தபடி உள்ளது. விடுமுறை முடிவடைய இன்னும் சில தினங்களே இருப்பதால், நேற்று அதிகாலையில் கன்னியாகுமரிக்கு ஏராளமான வாகனங்கள் வந்தன.

அவற்றில் வந்திறங்கிய சுற்றுலா பயணிகள் நேராக சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். பின்னர் கடலில் குளித்து விட்டு,.  பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அதைத்தொடர்ந்து கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று பார்த்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் திரண்டதால், படகுத்துறையில் நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம், சன்செட் பாயிண்ட் உள்பட அனைத்து இடங்களுக்கும் சென்று பார்த்தனர்.

அதைத்தொடர்ந்து வாகனங்களில் வந்தவர்களில் பெரும்பாலானோர் நேராக திற்பரப்பு அருவிக்கு சென்றனர். இதனால் திற்பரப்பு அருவியில் கூட்டம் அலைமோதியது. அங்கு அருவியில் கொட்டும் தண்ணீரில் அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இந்த அருவியின் அருகில் குழந்தைகள் குளிக்க நீச்சல் குளம் உள்ளது. அதில் குழந்தைகள் ஆனந்தமாக நீச்சல் அடித்து மகிழ்ந்தனர்.

மேலும் அருகில் உள்ள மாத்தூர் தொட்டி பாலம், பெருஞ்சாணி அணை ஆகியவற்றுக்கு பலரும் சென்று பார்த்து மகிழ்ந்தனர். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், சுற்றுலா தலங்களில் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

மேலும் செய்திகள்