மேலவாஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 120 லிட்டர் சாராயம் பறிமுதல் வாலிபர் கைது

மேலவாஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 120 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

Update: 2019-05-19 22:15 GMT
நாகூர்,

நாகை மாவட்டத்தில் மதுகடத்தலை தடுக்கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின்படியும் தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிறப்பு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு மேலவாஞ்சூர் அருகே முட்டம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டவுடன், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து சோதனை நடத்தினர். அதில் புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை தாமரை குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கொடிவீரன் (வயது 23) என்பதும், இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராய பாக்கெட்டுகள் கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொடிவீரனை கைது செய்து, அவரிடம் இருந்த 120 லிட்டர் சாராய பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்