உடுமலை அருகே கார்கள் மோதல்; 7 பேர் படுகாயம்

உடுமலை அருகே கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-05-19 22:15 GMT
குடிமங்கலம், 

உடுமலையை அடுத்த புக்குளம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் கார்த்திக் பிரகாஷ்(வயது 21 ). கார் டிரைவர். இவர் அதே ஊரை சேர்ந்த உறவினரான முருகானந்தம் என்பவரது மகன் கவி பிரபு (13) என்பவரை அழைத்துக்கொண்டு நேற்று காலை புக்குளத்திலிருந்து பெதப்பம்பட்டிக்கு காரில் சென்றார்.

காலை 9 மணியளவில் கார் பொட்டையம்பாளையம் பிரிவை தாண்டி சென்ற போது எதிரே வந்த சரக்கு ஆட்டோவுக்கு வழிவிட்டு இடதுபுறமாக ஒதுங்கியதாக தெரிகிறது. அப்போது சரக்கு ஆட்டோ பின்னால் வேகமாக வந்த மற்றொரு கார், எதிர்பாராதவிதமாக கார்த்திக் பிரகாஷ் ஒட்டி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 2 கார்களின் முன்புறமும் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் கார்த்திக் பிரகாஷ், கவிபிரபுவும், மற்றொரு காரில் வந்த மேலந்தாவளம் பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் மகாராஜா(41), வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உப்பால்(20 ), சங்கி (21 ), ஹோமன் (21 )ராகுல்(20) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தை பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து காயம் அடைந்தவர்களை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் கார்த்திக் பிரகாஷ், கவிபிரபு, மகாராஜா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்