வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் புகார் மனு அளித்தனர்.

Update: 2019-05-19 23:00 GMT
சேலம்,

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் வந்தனர். பின்னர் அவர்கள், போலீஸ் கமிஷனர் சங்கரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது, வன்முறையை தூண்டும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை பற்றி பேசியுள்ளார். அதாவது, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று கமல்ஹாசன் கூறியதற்கு அவரது நாக்கை அறுக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் கருத்து சொல்ல ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அவ்வாறு தேர்தல் பிரசாரத்தின்போது கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் தார்மீக உரிமை அமைச்சர் உள்ளிட்ட அனைத்து குடிமகனுக்கும் உள்ளது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் என்பதெல்லாம் மீறி ரவுடி போல் கமல்ஹாசன் நாக்கை அறுப்பேன் என பதில் அளித்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்