7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்தது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை ஜனநாயக வாலிபர் சங்கம் நேற்று நடத்தியது.

Update: 2019-05-20 22:45 GMT

சேலம், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், நளினி உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக கவர்னர் முடிவெடுத்து அறிவிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் மாநில அரசின் பரிந்துரைப்படி 7 பேரையும் கவர்னர் விடுவிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

அதன்படி சேலம் வடக்கு மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து கவர்னருக்கு கடிதங்களை எழுதி அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், மாநகர தலைவர் சதீஷ், செயலாளர் கதிர்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் இந்த கோரிக்கை தொடர்பாக கவர்னர் அலுவலக முகவரிக்கு 1,000 தபால் அட்டைகளை அங்குள்ள தபால் பெட்டியில் போட்டனர்.

மேலும் செய்திகள்