பூலாம்பட்டி காவிரி ஆற்றில் கதவணை மின்நிலைய பராமரிப்பு பணி மீண்டும் தொடக்கம் பெரிய விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

பூலாம்பட்டி காவிரி ஆற்றில் கதவணை மின்நிலைய பராமரிப்பு பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இதனால் கதவணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் பெரிய விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Update: 2019-05-20 22:30 GMT

எடப்பாடி, 

பூலாம்பட்டியில் காவிரி ஆற்றின் குறுக்கே 16 சட்டர்களுடன் கூடிய கதவணை மின்நிலையம் உள்ளது. இங்கு மின்சாரம் தயாரிப்பதற்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் பூலாம்பட்டியில் காவிரி ஆறு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தேங்கி பரந்து விரிந்து கடல் போல் காட்சியளிக்கும்.

இந்த பகுதியில், காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டத்திற்கும், ஈரோடு மாவட்டத்திற்கும் விசைப்படகு போக்குவரத்து நடைபெறுகிறது. இதனால் இப்பகுதியில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டிக்கு அதிகளவில் வந்து விசைப்படகில் பயணம் செய்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கதவணை மின்நிலைய சட்டர்கள் பழுதடைந்ததால் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேறியது. அதைத்தொடர்ந்து பழுதடைந்த சட்டர்களை மாற்ற அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணி நடைபெற்றது. இந்த பணி கடந்த வாரம் நிறைவடைந்ததை தொடர்ந்து, பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தண்ணீர் தேக்கி வைக்கும் பணி தொடங்கியது. இதனால் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக பெரிய விசைப்படகு போக்குவரத்தும் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் கதவணை மின்நிலைய பராமரிப்பு பணி தொடங்கியது. இதன் காரணமாக கதவணையில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் பூலாம்பட்டியில் பெரிய விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சிறு விசைப்படகுகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தண்ணீர் குறைவடைந்ததால் ஏராளமான மீனவர்கள் நாட்டுப்படகில் சென்று பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மீன்பிடித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்