அனகாபுத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

அனகாபுத்தூரில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-05-20 21:45 GMT
தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் நகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தண்ணீர் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலம் வழங்கும் குடிநீரும் மிகக்குறைந்த அளவே வினியோகிக்கப்படுகிறது. இதனால் நகராட்சி பகுதிகளில் லாரிகள் மூலம் வழங்கும் குடிநீர் தங்களுக்கு போதுமானதாக இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் அனகாபுத்தூர் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் இன்றி கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், நேற்று குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பல்லாவரம்-குன்றத்தூர் சாலையில் அனகாபுத்தூர் அம்பேத்கர் சிலை அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த சங்கர்நகர் போலீசார் மற்றும் அனகாபுத்தூர் நகராட்சி அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அந்த பகுதி மக்களுக்கு உடனடியாக லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணிநேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்