திருவள்ளூர் அருகே அடிப்படை வசதி இல்லாமல் அவதியுறும் இருளர் இன மக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரிக்கை

திருவள்ளூர் அருகே வசித்து வரும் இருளர் இன மக்கள் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2019-05-20 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், வெண்மனம்புதூர் கன்னியம்மன்நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் வசிக்கும் இவர்களுக்கு சரியான சாலை வசதி, மின்விளக்கு வசதி, சுடுகாடு வசதி போன்றவை செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக அவர்கள் ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று அருகில் உள்ள ஜாபர்நகரில் இருந்து குடிநீர் எடுத்து வருகின்றனர். ஊராட்சி சார்பில் டிராக்டர் மூலம் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் இருளர் இன மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் இருளர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 3 கைப்பம்புகளும், ஆழ்துளை கிணறுகளும் பழுதானதால் இப்பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. தற்போது கோடைக்காலம் என்பதால் இப்பகுதி மக் கள் குடிநீருக் காக மேலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுபற்றி இருளர் இன மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து குடிநீர் பற்றாக்குறையை போக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மனு அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே அப்பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறுகள் மற்றும் கைப்பம்புகளை அமைத்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருளர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்