சேலம் மாநகரில் சேதம் அடைந்த குப்பை தொட்டிகள் அகற்றம் தெருக்களில் குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

சேலம் மாநகரில் சேதம் அடைந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டன. இதனால் தெருக்களில் தொட்டிகள் இல்லாததால் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

Update: 2019-05-20 22:00 GMT
சேலம், 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை அள்ளி அகற்றுவதற்காக மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு தெருவிலும் குப்பை தொட்டி வைக்கப்படுகிறது. அதில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை போடுவார்கள். அவற்றை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினமும் அள்ளி செல்வது வழக்கம்.

இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான குப்பை தொட்டிகள் உடைந்து சேதம் அடைந்து உள்ளது. சேதம் அடைந்த குப்பை தொட்டிகள் அந்தந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. அந்த குப்பை தொட்டிகள், சேலம் சத்திரத்தில் உள்ள காமராஜர் மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் வேறு குப்பை தொட்டிகள் வைக்கவில்லை.

இதன்காரணமாக மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பை தொட்டி இல்லாததால் குப்பைகளை பொதுமக்கள் தெருக்களில் போடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பல இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சேதம் அடைந்த குப்பை தொட்டிகளை சரி செய்தோ அல்லது புதிய குப்பை தொட்டிகளையோ உடனடியாக நகரில் ஏற்கனவே குப்பை தொட்டிகள் இருந்த இடங்களில் மாநகராட்சி வைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொது மக்கள் கூறும் போது, மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் இல்லாத நிலை உள்ளது. குப்பைகள் தெரு ஓரங்களில் போடப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சேதம் அடைந்த குப்பை தொட்டிகளை சரி செய்து, அவற்றை, அப்புறப்படுத்தப்பட்ட பகுதியில் மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்கள்.

மேலும் செய்திகள்