பாளையங்கோட்டையில் பேராசிரியர் உள்பட 3 பேர் வீடுகளில் ரூ.4½ லட்சம் நகை-பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பாளையங்கோட்டையில் பேராசிரியர் உள்பட 3 பேரின் வீடுகளில் கதவை உடைத்து ரூ.4½ லட்சம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-05-20 23:30 GMT
நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பிருந்தாவனம் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஆண்டனி வசந்தகுமார் (வயது 39). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று அதிகாலையில் வீட்டின் உள்பக்கத்தில் உள்ள ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது கொள்ளை கும்பல் இவரது வீட்டின் வெளிப்பக்க கதவை மெதுவாக உடைத்து திறந்து உள்ளனர். இந்த சத்தம் கேட்டு கண் விழித்த ஆண்டனி வசந்தகுமார், தன்னுடைய தந்தை சார்லஸ்தான் கதவை திறக்கிறார் என கருதி, சத்தம் கொடுத்தார். ஆனால் பதில் சத்தம் வரவில்லை. இதனால் ஆண்டனி வசந்தகுமார், தனது வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்திருப்பதை அறிந்தார்.

உடனே அவர், அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உஷார் படுத்தினார். இதையடுத்து அந்த பகுதி மக்கள் ஆண்டனி வசந்தகுமார் வீட்டுக்கு திரண்டு வந்தனர்.

ஆனால், உஷாரான கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து வீட்டுக்குள் பார்த்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்றிருந்தது தெரியவந்தது. இதுபற்றி பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்த தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று காலை மேலும் 2 வீடுகளில் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. அதாவது, அதே தெருவை சேர்ந்தவர் மாணிக்கசுந்தரி (40). இவர் நெல்லை கோர்ட்டில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோடை விடுமுறையையொட்டி வீட்டை பூட்டி விட்டு நாங்குநேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். அவரது வீட்டில் கொள்ளையர்கள் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர்.

இதை அறிந்த மாணிக்கசுந்தரி உடனடியாக வீட்டுக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவரது வீட்டில் 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.35 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுதவிர அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிலும் கொள்ளையர்கள் உள்ளே புகுந்து 5 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்றிருப்பதாக தெரிகிறது. கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு ரூ.4½ லட்சம் இருக்கும். இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை அள்ளிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அடுத்தடுத்த வீடுகளில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்