அரசியல்வாதிகளை காமெடியனாக சித்தரிப்பதா? ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம் - குமாரசாமி ஆவேசம்

அரசியல்வாதிகளை காமெடியனாக சித்தரிப்பதா? என கோபமடைந்த குமாரசாமி, ஊடகங்களை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.

Update: 2019-05-21 00:11 GMT
பெங்களூரு, 

மைசூருவில் நேற்று முன்தினம் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஊடகத்தினருடன் நல்ல நண்பனாக தான் இருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக ஒரு குறிப்பிட்ட தலைவர், கட்சியினரை குறிவைத்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. நான் ஊடகத்தின் உதவியால் வாழும் தலைவர் அல்ல. நான் 6 கோடி மக்களின் ஆசிர்வாதத்துடன் ஆட்சி நடத்தி வருகிறேன்.

சில செய்தி தொலைக்காட்சிகள் தினமும் அரை மணி நேரம் அரசியல் கட்சியினரை காமெடியனாக சித்தரித்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கூறவில்லை. ஆனால் நாங்கள் கூறும் கருத்தை திரித்து நையாண்டி செய்து வருகின்றன.

சில தொலைக்காட்சி சேனல்கள் அரசியல் கட்சி தலைவர்களை முரண்பாடாக காட்டுகிறது. நாங்கள் கூறும் தகவல்கள், வெளியிடும் அறிக்கைகளை மூடி மறைத்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது சரியல்ல. அரசியல் வாதிகளை காமெடியனாக சித்தரிப்பது மற்றும் குறிப்பிட்ட கட்சியினரை குற்றச்சாட்டுவது உள்ளிட்ட அதிகாரத்தை ஊடகத்தினருக்கு கொடுத்தது யார்?. கர்நாடகத்தில் ஊடகத்தை கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவர ஆலோசிக்கப்படும்.

கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழ்ந்து விடும் என்றும் அடிக்கடி ஊடகங்களில் செய்திகள் வெளி வருகின்றன. எனது தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும். இந்த அரசு வலுவாக உள்ளது. எளிதில் கூட்டணி அரசை கவிழ்க்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் குமாரசாமி மகன் நிகில் போட்டியிடுகிறார். அவர் தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குசேகரிக்க மண்டியா வந்ததாகவும், அதன் பிறகு அவர் வரவில்லை என்று கூறி நிகில் எல்லிதியப்பா (நிகில் எங்கே இருக்க) என்ற தலைவர் ஒரு கன்னட தொலைக்காட்சி அரை மணி நேரம் நையாண்டி நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இதனால் ஆத்திரமடைந்த குமாரசாமி ஊடகத்தினர் மீது கடுமையாக சாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே குமாரசாமி, தங்களை ஊடகத்தினர் விமர்சித்து வருவதாகவும், எனவே ஊடகத்தினருக்கு இனி பேட்டி அளிக்க மாட்டேன் என்றும் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்